Thursday, 20 February 2014

நதி மூலம் தேடவேண்டாம்

நதி மூலம் தேடவேண்டாம்.

இப்படித்தான் சிலர் இன்னும் ஏனோ மாறவில்லை.
என்ன வேண்டும் இவர்களுக்கு?ஏதும் புரியவில்லை.
அப்படியும் இப்படியும் எப்படியும் இவரில்லை.
அர்த்தம் சொல்லி இவர்விளங்க ஆளும் யாருமில்லை.

நன்மை என்ன தீமை என்ன நாலும் தெரிந்திருப்பான்
உண்மை அதை மறுப்பதற்கும் உள்ளொன்றும் செய்திருப்பான்.
தீமை என்றே தீர்த்ததையும் நன்மை என்றும் நட்டிவைப்பான்.
நன்மை எனத் தேர்ந்ததிலும் தீமை ஒட்டி வெட்டிப் பொயப்பான்’

நல்லதொன்று செய்தாற்குப் பொல்லதெல்லாம் சாட்சி வைப்பான்.
உள்ளபடி நல்லததை ஒப்புக்கொள்ளப் பொய்யுரைப்பான்.
நல்லதென்ற சொல்லிவற்கு பொல்லாத ஒவ்வாமை.
வல்லமை அதிலென்ன வரவாகும் இவர் பெருமை?

கேடுவரும் என்றறிந்தால் கூடியெல்லாம் எதிர்க்கலாம்
தேடி வரும் நன்மைதனை தேவையென்ன எதிர்ப்பதால்
தெருவாடத் தெரியாதவன் தெருக்கோணல் என்பானாம்.?
வரும் நன்மை வரவேற்க வலிமையற்றோன் கோழையாம்.

மனதிலொன்றை வைத்துகொண்டு மற்றவரை இழுப்பான்
சனத்திலொன்றை சொல்லிக்கொண்டு உற்றதையும் மறுப்பான்.
தனக்கிலான லாபநட்டம் கணக்கிலதைப் பார்ப்பான்.
தனக்கிலது நட்டமானால் பிணக்கியதைக் கெடுப்பான்.

நிசமாக உறங்குபவன் நிழல்பட விழித்திடுவான்.
நித்திரை போல் பாசாங்கன் நெருப்பிட்டும் எழமாட்டான்.!
பத்திரமாய் பொய்யர்களை பழகித்தான் பேசவேண்டும்`
சத்தியமாய் மனிதெரென சகலரையும் நம்பவேண்டாம்.

நன்மை உண்மையானால் நதிமூலம் தேடவேண்டாம்.
தன்மை செம்மையானால் தன்னலம் சேரவேண்டாம்.
பன்மை பாராட்டி பழிப்பவனைத் தள்ளிவிட்டு
திண்மை மனங்கொண்டு தேர்ந்ததில் கொள்வோமே!


கொ.பெ.பி.அய்யா..



Tuesday, 18 February 2014

கல்லூரிச் சொந்தம்.

இளையோரே! இனியோரே!

இளையோரே இனியோரே!
இளங்கலை இணைந்தோரே!
வளர் தொடர் நட்புகளே!
வணங்கியே வாழ்த்துகிறேன்.!

இளமைத் தோட்டத்தின் இன்று பூத்தமலர்களே!
இளைய தலைமுறையே நாளைய பாரதமே!
வருக வருக என வரவேற்பு செய்வதில்
நிறைக நிறைக என பெருமை அடைகிறேன்.

தேடிப் பறக்கும் பட்டாம் பூச்சிகளாய்
பாடி மகிழும் பறவைக் கூட்டங்களாய்
கூடிப் பழகும் குழந்தைச் செல்வங்களாய்
நாடியே வளர்வோம் நாளும் நட்புகளாய் !

மறுவிலா பாச மலர்களே!
வீசும் வாசம் நேசம் மட்டுமே!
ஆசைக் கனவுகள் அர்த்தம் ஆகவே
ஓசை உமக்குள் ஒலிர்வதும் உணர்கிறேன்.

முந்தி வந்த மூத்தோர் நாங்கள்
பிந்தி இணைந்தோர் பிரியர் நீங்கள்.
சந்திக்க வைத்த சன்னதி கல்லூரி
இந்திய மண்ணுக்கே சிந்திக்க வாழ்கவே!

கூடிய விதியால் தேடிய சொந்தங்கள்
ஓடிய காலங்கள் பாடிய பந்தங்கள்
நாடிய கல்வி நாளை முடிகையில்
மூடிய முகங்களாய் முடியாது தொடர்வோம்.

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இங்கே இணைந்ததும் இறைவன் அருளே!!
சங்கமம் ஆனோம் சகோதரம் கண்டோம்
பங்கம் இல்லாப் பறவைகள் சேர்ந்தோம்.

காணா முகங்கள் கண்டிட்ட உறவுகள்!
வாணாளெல்லாம் வளரும் வரவுகள்!
வீணாப்போமோ எனயெழு நினைவுகள்!
தோணாதொழிந்தால் தொடருமோ நட்புகள்!

பாசம் பழகும் நேச உறவுகளே!
பறக்கும் திசைகளோ பலபல பலவே!
வாசம் மட்டும் வீசும் நேசமாய்
வாழும் நட்புகள் ஆளும் திசையெல்லாம்.

காணும் கடவுளாய் மானுடம் போற்றும்  
பேணும் மருத்துவம் பூணிய நாமும்.       
ஊன்றிக் கருத்தை உள்ளம் கற்றும்
தோன்றிற் புகழாய் தொண்டாய்ச்செய்வோம்.

படிக்கும் பாடமும் பழகும் கல்வியும்
முடித்த பின்னரும் முடிவது இல்லை.
நடப்பில் தொடரும் நாளும் புதுமைகள்
தொடர்பில் தேடி தொழிலில் வளர்வோம்..  

கொ.பெ.பி.அய்யா.








இதய சங்கமம்

இதய சங்கமம்!


இரும்புக்கோட்டை எதற்காகும்
துருவழிக்குமே---கற்பினும்
சிறப்பான தூய நட்பே
உறுதிக் காப்பாகும்!

பிறைபோன்று வளர்வதுதான்
நிறையும் நட்பாகும்--அறிவு.
குறைந்தோரின் பழக்கமோ
கரையும் நிலவாகும்!

படிக்கப்படிக்க ஞானந்தரும்
வடித்த நூலது--அன்பில்
பழகப்பழக பழமை கூடும்
வளமை நட்பாகும்!

சிரித்துப்பழக நண்பரென்றால்
கிறுக்கன் போதுமே--தவறு
இடித்துக்குட்டித் திருத்துவோரே
இயல்பு நண்பராம்!

நேரே கண்டு தழுவுதல்தான்
நட்பு என்றில்லை--நேர்
எண்ணங்களே இருந்தாலாகும்
இதய சங்கமம்!

முகம் பழகும் பழக்கமெல்லாம்
முகவுறை மட்டும்---காதல்
அகம் தழுவும் கேண்மையே
ஆன்ம நட்பாகும்!

நல்வழிக்கு  நடத்துபவன்
நல்ல நண்பனாம்---அவன்
அல்லல் நேரும் போதுங்கூட
தோள் கொடுப்பானாம்!

தன் துயரில் உழ்ல்வதாக
தானே துடிப்பான்--மென்மை
பெண் மானங்காப்பது போல்
கண்ணனாவானே!

நட்பினும் உயர் மேன்மை
நடப்பனில் உண்டோ--அது
எப்போதும் உதவத்தேடும்
ஏட்டியம் வங்கி!

அளந்தாய்ந்து தொடர்வதல்ல
ஆக்கமுறும் நட்பாம்---வெறும்
அலங்காரப் பேச்செல்லாம்
ஆவதில்லை நட்பாம்!


கொ.பெ.பி.அய்யா.











தேடிக்கூடி மகழ்வோம்

தேடிக் கூடுவோம்!

என்னைத் தேடித் தேடி நீயும்
உன்னைத் தேடித் தேடி நானும்
திக்குத் தெரியாத காட்டில்
திரிந்து அலைகிறோம்நண்பா
புரிந்தும் தொலைகிறோம்.

நீயும் கவிஞன் நானும் கவிஞன்-ஒரு
நிலையில் இருக்க மறந்தோம்.
பாயும் கற்பனைகள் பயணத் திசைகளில்
நீயும் நானும் பிரிகிறோம்பின்
எண்ண அலைகளால் உணர்ந்து புரிகிறோம்.

தேடும் பொருளென்ன கூடும் விதமென்ன  
விடை சொல்லும் தருணங்களே!
ஓடும் பாதைகள் நேரும் அனுபவங்கள்
பாடும் பொருள் சொல்லுமே!அது
பாடிப் பரவசம் பரவும் திசை சொல்லுமே!

ஓடும் திசைகள் தேடும் பொருள்கள்
ஒருமித்தம் ஆவதில்லை.
கூடும் பொழுததில் தேடிய செல்வங்கள்
கொட்டவும் மறுப்பதில்லை---தேடிக்
கண்டதில் விளங்கவும் பேதமில்லை.

மக்கள் விளங்க நாமே தேடும்
மனிதம் விளக்கும் மூலிகைகள்.
பற்பல பலன்கள் பற்பல விதங்கள்
சொற்கள் சொல்லும் சுந்தரக் கவிகள்--நாமும்
இப்புவி உயர இன்னும் தேடுவோம்.


கொ.பெ.பி.அய்யா.  

எங்கிருந்தோ பாடும் குரல்

எங்கிருந்தோ பாடும் குரல்

எங்கிருந்தோ பாடும் குரல்
என் செவித் தொடுவதென்ன?
இங்கிருந்து தேடும் நெஞ்சம் 
அங்கு வுன்னைக் கூடாதென்ன?

உன் பாட்டுக் கேட்ட பின்னே
என் பாட்டு மறந்தேனே!
என் னவங்கே நடக்குதடா ?
என் னெஞ்சம் புலம்புதடா!

அக்கம் பக்கம் பார்க்க வேண்டாம்.
அடுத்த பேச்சுக் கேட்க வேண்டாம்.
பொழுது போக்கு லீலையவை
பொருட்டாக்கிக் கொள்ளவேண்டாம்.

வெட்டிக்கூட்டம் வீண் கேலி
சுட்டிச்சொல்லும் தீயும் மொழி
பட்டாலும் தட்டித்தள்ளி
விட்டு ஏகு சேரும் வழி!

சண்டைக் குணம் சாசுவதம்
கொண்டதவர் பிறவித்தனம்.
மண்டையதுப் பாழும் மடம்
தண்டம் அதுக் காலிக்குடம்.

உனக்கும் ஒரு எல்லைக்கோடு
கணக்கு அதைத் தேடி ஓடு!
பிணக்குகளைப் புரட்டிப்போடு
எனக்குமுந்தித் தொட்டுத் தொடு!


கொ.பெ.பி.அய்யா

நட்பே காதல்

நட்பே காதல்

துலங்குவது நட்பானால்
தொடர்வது காதலாகும்.
நட்புக்கும் காதலுக்கும்
நடப்பினில் பாலில்லை.
பொதுப்பாலே புரிந்திடுவீர்!

ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும்
அன்பு கொண்டால்தான் நட்பா?
பால் வேறாய்ப் பழகினால் காதலா?
பண்பான அன்பானால் நட்பும் காதலே!

நட்பும் காதலும் பொருளில் பேதமில்லை
செப்பும் சொற்களில்தான் வாதம் உள்ளே.
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பும் பொதுவாகும்
காணும் பாலினம் தோணுவதும் மனிதமாகும்.

கொ.பெ.பி.அய்யா.

Monday, 17 February 2014

நட்புக்கும் கற்புண்டு

நட்புக்கும் கற்புண்டு.

நட்பும் காதலும் பாலில் வேற்றுமை
கற்பில் இரண்டும் பேணும் ஒற்றுமை.
இருபால் அன்பில் இணைவது காதல்
ஒருபால் அன்பில் உறைவது நட்பு.

தூய்மை தானது தொடரும் உறவு.
வாய்மை தானது வளரும் அன்பு,
உறவும் அன்பும் உணர்ந்து துடிப்பது.
துடித்து உயிரில் கலந்து பிறப்பது.

நட்பின் ஏமாற்றம் நஞ்சுண்டது போலாகி
தொண்டைக் குழியில் நின்றும் முள்ளாகி
விக்கவும் கக்கவும் இயலாது தானாகி
தொக்கிய துயரமாய் வருத்தும் மேலாகி.

நட்பின் துரோகம் சமாதானம் ஆகாது.
நினைக்க நினைக்க நெஞ்சம் ஆறாது
நட்புக்கும் கற்புண்டு என்பதால் தேறாது--
நாசமாகினால் உணர்வுகள் தாங்காது.

உள்ளங்கள் நம்பிய உணர்வுகள் பொருந்திய
உண்மைகள் உயிரில் ஒன்றிக் கலந்திட்ட
நன்றிகள் நட்பில் நடுநிலை தவறியும்
கள்ளமானால் நட்பது வாழாது.

கொ.பெ.பி.அய்யா.