Wednesday, 12 November 2025

காத்திருப்பேன் கல்லறையோ

காத்திருப்பேன்  கல்லறையே!

டேய............டேய்...............
என்னைப்
பரிதவிக்கவிட்ட பாவி நீ!
நண்பனாடா...................நீ!
ஏனிந்தச் சுயநலம்.............
எப்படி..............எப்படியடா?
உன்னால் முடிகிறது........?
ஒரு நாள் பிரிவின் வலியே
உனக்கு இப்படியென்றால்...
காலமெல்லாம் பிரிவைத்
தாங்கிட நான்  மட்டும்
கல் நெஞ்சக்காரனோடா?
நானோ உன்னிடம் சொல்லித்தான்
போனேன்........நீயோ சொல்லாமலே
போய்  விட்டாயடா.............................
என்னையுமுன்னையும் பிரித்திட
இயற்கையும் வெல்லுமோ ! எனவும்
சொன்னாயடா.......................................!
இன்று  அந்த  இரக்கமில்லா
இயற்கைதானே வென்றதடா...............!
தினமுமென்னைத் தேடிவந்து
அழைப்பாயடா காற்றுவாங்க..இன்று
அந்தக் காற்றையும் மறந்தாயோ!
என்னையும் மறந்தாயோ!
ஆலமரம் மறந்தாயோ!
ஆற்றுமணல் மறந்தாயோ!
ஏரிக்கரை மறந்தாயோ!
தேரிமேடும்  மறந்தாயோ!
உறவுகள் மறந்தாயோ!
உற்ற துணை மறந்தாயா!
எல்லாமே மறந்தாயோ!
இடுகாடே நினைந்தாயோ!
காற்றோடு கலந்த உன்
கல்லறையே துணையடா...........!
காத்திருப்பேன்  அங்கேதான்......
காலனை அனுப்பி வை!









Thursday, 31 July 2025

நட்புக்குழு

நட்புக் குழுவாம் எழுத்து வாழ்க

தேடிப் பறக்கும் பட்டாம் பூச்சிகளாய்
பாடி மகிழும் பறவைக் கூட்டங்களாய்
கூடிப் பழகும் குழந்தைச் செல்வங்களாய்
நாடியே வளர்வோம் நாளும் நட்புகளாய் !!

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்!
எவர்முகமுந்தேடி இன்னும் அறியோம்!
காற்றில் அலையும் வலைதள உலகம்!
கூட்டி அணைத்திடக் குடும்பம் ஆனோம்!

காணா முகங்கள் கண்டிட்ட உறவுகள்!
வாணாலெல்லாம் வளரும் வரவுகள்!
வீணாப்போமோ எனயெழு நினைவுகள்!
தோணாதொழிந்தால் தொடருமோ நட்புகள்!

குரவர்கள் நாமே தர்மங்கள் படைப்போம்!
மறவர்கள் நாமே மடமைகள் உடைப்போம்!
அறவர்கள் நாமே வன்மைகள் துடைப்போம்!
உறவுகள் நாமே ஊழினை அடைப்போம்!!

தெய்வம் தந்த வீடு எழுத்து நமக்கிருக்கு.
பெய்வம் அதில் அன்பு வளர்ந்து சிறப்பதற்கு.
உய்வம் தமிழ் பழகி மனிதம் சொல்வதற்கு.
செய்வம் தமிழ் கவிதை உலகம் நிலைப்தற்கு .

தேடும் தமிழ் தேடு எழுத்திடத்தில்.
பாடும் தமிழ் பாடு எழுத்திடத்தில்.
சூடும் கலைச் சூடு  எழுத்திடத்தில்.
நாடும் நிலை நாடு எழுத்திடத்தில்.

உந்தன் பேர் நிறுத்தும் இந்த மண்ணிலே!
முந்தன் நேர் பொருத்தும்உந்தன்எண்ணிலே!
பிந்தன் சீர் திருத்தும் அந்தக் கண்ணிலே!
இந்தன் பார் கருத்தும் கந்தும் ஒண்ணிலே!

படிக்கும் தமிழினிக்க பழகும் கவியினிக்க
வடிக்கும் பொருளினிக்க வாழும் வாழ்வினிக்க
முடிக்கும் செயலினிக்க முந்தும் கருத்தினிக்க
துள்ளும் மனமினிக்க தொடர்வோம் எழுத்தினிக்க. 

எவரிது செய்யினும் அவர்வாழ வேண்டும்!
சுவராய் அமைந்தார் ஓவியம் கண்டோம்!
அழியா ஓவிய எழுத்துக் குழுவாம் நட்பும்
வழியாய் துணையாய் வாழ்ந்திட வாழ்வோம்!!


தங்கள் அன்பன்

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 23 July 2025

கவிஞன் ஓரு விஞ்ஞானி.

கவிஞன் ஒரு விஞ்ஞானி

வேலை வேறென்ன செய்வான்!!
வேலையே எழுதுவதுதான்!!
வெட்டியென்றே இப்படித்தான்
சுட்டாமல் சுட்டுவர்..

எமக்குத் தொழில் கவிதை
என்று பாரதி அன்றதை
பெருமையாகச் சொன்னானே.
வறுமையின் வாடலிலும்!

எழுதுவதென்பது வெறும்
பொழுது போக்கோ அது
உழுபவன் படும் பாடென
உணர்வாரோ!!

பழுதுபடாது அஞ்சி அஞ்சி
படைப்பதென்பதும் எளிதோ!
கழுதையறியுமோ சொல்வீர்
கற்பூர வாசனையும்!!

கவிஞனொரு தாயுமானவன்
கவிதையொன்றில் கூறினேன்
பிரசவிக்கும் வேதனையது
பேசாதீர் கேலியும்!

ஓலையும் தாளும் கடந்து
அலையும் காற்றில் எழுத்து
எனக்காலம் மாறினாலும்
எழுத்து ஓயவில்லை!

அருமையடைந்த கவிஞர்களும்
வறுமைக்குத்தானே உறவாகினர்.
ஆனாலும் உலகம் உய்ய அவரின்
ஆணிசாயவில்லையே!

கவிஞனவனோ விஞ்ஞானியே!
காலமுகந்த கருத்தாய்ந்தே
புவிக்குச்சொல்வான் புதுமையே!
புரியுமுலகு வாழுமே!


சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.

Thursday, 20 February 2014

நதி மூலம் தேடவேண்டாம்

நதி மூலம் தேடவேண்டாம்.

இப்படித்தான் சிலர் இன்னும் ஏனோ மாறவில்லை.
என்ன வேண்டும் இவர்களுக்கு?ஏதும் புரியவில்லை.
அப்படியும் இப்படியும் எப்படியும் இவரில்லை.
அர்த்தம் சொல்லி இவர்விளங்க ஆளும் யாருமில்லை.

நன்மை என்ன தீமை என்ன நாலும் தெரிந்திருப்பான்
உண்மை அதை மறுப்பதற்கும் உள்ளொன்றும் செய்திருப்பான்.
தீமை என்றே தீர்த்ததையும் நன்மை என்றும் நட்டிவைப்பான்.
நன்மை எனத் தேர்ந்ததிலும் தீமை ஒட்டி வெட்டிப் பொயப்பான்’

நல்லதொன்று செய்தாற்குப் பொல்லதெல்லாம் சாட்சி வைப்பான்.
உள்ளபடி நல்லததை ஒப்புக்கொள்ளப் பொய்யுரைப்பான்.
நல்லதென்ற சொல்லிவற்கு பொல்லாத ஒவ்வாமை.
வல்லமை அதிலென்ன வரவாகும் இவர் பெருமை?

கேடுவரும் என்றறிந்தால் கூடியெல்லாம் எதிர்க்கலாம்
தேடி வரும் நன்மைதனை தேவையென்ன எதிர்ப்பதால்
தெருவாடத் தெரியாதவன் தெருக்கோணல் என்பானாம்.?
வரும் நன்மை வரவேற்க வலிமையற்றோன் கோழையாம்.

மனதிலொன்றை வைத்துகொண்டு மற்றவரை இழுப்பான்
சனத்திலொன்றை சொல்லிக்கொண்டு உற்றதையும் மறுப்பான்.
தனக்கிலான லாபநட்டம் கணக்கிலதைப் பார்ப்பான்.
தனக்கிலது நட்டமானால் பிணக்கியதைக் கெடுப்பான்.

நிசமாக உறங்குபவன் நிழல்பட விழித்திடுவான்.
நித்திரை போல் பாசாங்கன் நெருப்பிட்டும் எழமாட்டான்.!
பத்திரமாய் பொய்யர்களை பழகித்தான் பேசவேண்டும்`
சத்தியமாய் மனிதெரென சகலரையும் நம்பவேண்டாம்.

நன்மை உண்மையானால் நதிமூலம் தேடவேண்டாம்.
தன்மை செம்மையானால் தன்னலம் சேரவேண்டாம்.
பன்மை பாராட்டி பழிப்பவனைத் தள்ளிவிட்டு
திண்மை மனங்கொண்டு தேர்ந்ததில் கொள்வோமே!


கொ.பெ.பி.அய்யா..



Tuesday, 18 February 2014

கல்லூரிச் சொந்தம்.

இளையோரே! இனியோரே!

இளையோரே இனியோரே!
இளங்கலை இணைந்தோரே!
வளர் தொடர் நட்புகளே!
வணங்கியே வாழ்த்துகிறேன்.!

இளமைத் தோட்டத்தின் இன்று பூத்தமலர்களே!
இளைய தலைமுறையே நாளைய பாரதமே!
வருக வருக என வரவேற்பு செய்வதில்
நிறைக நிறைக என பெருமை அடைகிறேன்.

தேடிப் பறக்கும் பட்டாம் பூச்சிகளாய்
பாடி மகிழும் பறவைக் கூட்டங்களாய்
கூடிப் பழகும் குழந்தைச் செல்வங்களாய்
நாடியே வளர்வோம் நாளும் நட்புகளாய் !

மறுவிலா பாச மலர்களே!
வீசும் வாசம் நேசம் மட்டுமே!
ஆசைக் கனவுகள் அர்த்தம் ஆகவே
ஓசை உமக்குள் ஒலிர்வதும் உணர்கிறேன்.

முந்தி வந்த மூத்தோர் நாங்கள்
பிந்தி இணைந்தோர் பிரியர் நீங்கள்.
சந்திக்க வைத்த சன்னதி கல்லூரி
இந்திய மண்ணுக்கே சிந்திக்க வாழ்கவே!

கூடிய விதியால் தேடிய சொந்தங்கள்
ஓடிய காலங்கள் பாடிய பந்தங்கள்
நாடிய கல்வி நாளை முடிகையில்
மூடிய முகங்களாய் முடியாது தொடர்வோம்.

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இங்கே இணைந்ததும் இறைவன் அருளே!!
சங்கமம் ஆனோம் சகோதரம் கண்டோம்
பங்கம் இல்லாப் பறவைகள் சேர்ந்தோம்.

காணா முகங்கள் கண்டிட்ட உறவுகள்!
வாணாளெல்லாம் வளரும் வரவுகள்!
வீணாப்போமோ எனயெழு நினைவுகள்!
தோணாதொழிந்தால் தொடருமோ நட்புகள்!

பாசம் பழகும் நேச உறவுகளே!
பறக்கும் திசைகளோ பலபல பலவே!
வாசம் மட்டும் வீசும் நேசமாய்
வாழும் நட்புகள் ஆளும் திசையெல்லாம்.

காணும் கடவுளாய் மானுடம் போற்றும்  
பேணும் மருத்துவம் பூணிய நாமும்.       
ஊன்றிக் கருத்தை உள்ளம் கற்றும்
தோன்றிற் புகழாய் தொண்டாய்ச்செய்வோம்.

படிக்கும் பாடமும் பழகும் கல்வியும்
முடித்த பின்னரும் முடிவது இல்லை.
நடப்பில் தொடரும் நாளும் புதுமைகள்
தொடர்பில் தேடி தொழிலில் வளர்வோம்..  

கொ.பெ.பி.அய்யா.








இதய சங்கமம்

இதய சங்கமம்!


இரும்புக்கோட்டை எதற்காகும்
துருவழிக்குமே---கற்பினும்
சிறப்பான தூய நட்பே
உறுதிக் காப்பாகும்!

பிறைபோன்று வளர்வதுதான்
நிறையும் நட்பாகும்--அறிவு.
குறைந்தோரின் பழக்கமோ
கரையும் நிலவாகும்!

படிக்கப்படிக்க ஞானந்தரும்
வடித்த நூலது--அன்பில்
பழகப்பழக பழமை கூடும்
வளமை நட்பாகும்!

சிரித்துப்பழக நண்பரென்றால்
கிறுக்கன் போதுமே--தவறு
இடித்துக்குட்டித் திருத்துவோரே
இயல்பு நண்பராம்!

நேரே கண்டு தழுவுதல்தான்
நட்பு என்றில்லை--நேர்
எண்ணங்களே இருந்தாலாகும்
இதய சங்கமம்!

முகம் பழகும் பழக்கமெல்லாம்
முகவுறை மட்டும்---காதல்
அகம் தழுவும் கேண்மையே
ஆன்ம நட்பாகும்!

நல்வழிக்கு  நடத்துபவன்
நல்ல நண்பனாம்---அவன்
அல்லல் நேரும் போதுங்கூட
தோள் கொடுப்பானாம்!

தன் துயரில் உழ்ல்வதாக
தானே துடிப்பான்--மென்மை
பெண் மானங்காப்பது போல்
கண்ணனாவானே!

நட்பினும் உயர் மேன்மை
நடப்பனில் உண்டோ--அது
எப்போதும் உதவத்தேடும்
ஏட்டியம் வங்கி!

அளந்தாய்ந்து தொடர்வதல்ல
ஆக்கமுறும் நட்பாம்---வெறும்
அலங்காரப் பேச்செல்லாம்
ஆவதில்லை நட்பாம்!


கொ.பெ.பி.அய்யா.











தேடிக்கூடி மகழ்வோம்

தேடிக் கூடுவோம்!

என்னைத் தேடித் தேடி நீயும்
உன்னைத் தேடித் தேடி நானும்
திக்குத் தெரியாத காட்டில்
திரிந்து அலைகிறோம்நண்பா
புரிந்தும் தொலைகிறோம்.

நீயும் கவிஞன் நானும் கவிஞன்-ஒரு
நிலையில் இருக்க மறந்தோம்.
பாயும் கற்பனைகள் பயணத் திசைகளில்
நீயும் நானும் பிரிகிறோம்பின்
எண்ண அலைகளால் உணர்ந்து புரிகிறோம்.

தேடும் பொருளென்ன கூடும் விதமென்ன  
விடை சொல்லும் தருணங்களே!
ஓடும் பாதைகள் நேரும் அனுபவங்கள்
பாடும் பொருள் சொல்லுமே!அது
பாடிப் பரவசம் பரவும் திசை சொல்லுமே!

ஓடும் திசைகள் தேடும் பொருள்கள்
ஒருமித்தம் ஆவதில்லை.
கூடும் பொழுததில் தேடிய செல்வங்கள்
கொட்டவும் மறுப்பதில்லை---தேடிக்
கண்டதில் விளங்கவும் பேதமில்லை.

மக்கள் விளங்க நாமே தேடும்
மனிதம் விளக்கும் மூலிகைகள்.
பற்பல பலன்கள் பற்பல விதங்கள்
சொற்கள் சொல்லும் சுந்தரக் கவிகள்--நாமும்
இப்புவி உயர இன்னும் தேடுவோம்.


கொ.பெ.பி.அய்யா.